♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 25 ஜூலை, 2012

தாயகம் முதல் அமீரகம் வரை






கூடிய உறவின்
வாடிய முகம் கண்டு,
விழிதனில் மகிழ்வின்றி
விடைதர மொழியின்றி
நடந்திட வழியின்றி
நான் வரும் நேரம்


காத்திருக்கும் காதலிபோல்
ஓடுதளத்தில் நின்றிருந்தாய்...
வரமறுக்கும் காலிரண்டை
கம்பளமிட்டு வரவேற்றாய்...


பிரிவின் வேதனை அனல் கூட்ட,
குளிரூட்டிதனை கொண்டு
கனல் தணிக்க முற்பட்டாய்

வினாடி முள் விரைவாய் ஓடி
புறப்பட உனை வலியுருத்த
கனநேரம் பொருக்காது
எந்திரத்தை சுழலவிட்டு,
விசை முறுக்கி முன்சென்றாய்

எனை நானே கட்டிக்கொண்டு
இருக்கை'யிலே கைதியாக,
வழிநின்று வகுப்பெடுத்தாய்
வாய் மூடி குறிப்பெடுத்தேன்...

திறன் கூட்டி தளம் ஓடி
தரை நீங்கும் அந்நேரம்
கழுகது கைப்பற்ற.,
காப்பாற்ற கதறியழும்
இளங்கோழிக் குஞ்சினது
உளம் ஒத்து உறைந்து போனேன்.

விரும்பியதை கேள் என்று
பட்டியலை முன்வைத்தாய்..
அதை விரிக்க மனமின்றி
அப்படியே நான் கொடுக்க..
கொண்டதை கை தந்து
விருந்தோம்பல் கடன்கழித்தாய்

துயர்மறந்து துயில்கொள்ள ஒளிகுறைத்து நீ உதவ,
முகம்சிவக்க கதறிவிட்டு,கண்ணயரும் பாலகனாய்
சிறுதுயிலில் மெய் மறக்க...

பயணிகளின் கவனத்திற்கு...
பயணதூரம் குறைகிறது
இறங்கு தளம் தெரிகிறது
இடுப்புப் பட்டை தனை இருக்கி,
இயல்பாய் அமரக என
ஒலி பெருக்கி எனை பணித்தாய்...

பசுமைகண்ட உள்ளமது
பாலைகாண மறுக்கயிலே,
இல்லமதின் வறட்சி நீங்க
எண்ணமதை மாற்றிக்கொண்டேன்

இறகு மடித்து தரை இறங்கி,
அனல் பறக்கும் பாலை காட்டி
இறங்கி நட என்றுறைத்தாய்

அரபு நாட்டை தரம் உயர்த்த
தாய் நாட்டைப் பிரிந்த என்னை,
வருகவென வரவேற்றான்
ஆங்கோர்
வெண்ணிற ஆடை மூர்த்தி...


தொலைவில்
ரஜின்

ரமலான் சிறப்புகள்:


ரமலான் சிறப்புகள்:


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
புனித மிக்க இந்த அருமையான ரமலான் மாதம் நோன்புக்குரிய மாதம்.  சிறப்பான மாதத்தினை நாம் அடைந்துவிட்டோம்..
இந்த மாதத்தின் சிறப்புகள் அறிய வேண்டாமா?

Free Orkut and MySpace ramadan mubarak Graphics Glitters
 நபிகள் நாயகம்(ஸல்) கூறுகிறார்கள்
”ரமலான் மாதம் வந்துவிட்டால் வானங்களின் கதவுகளும், சொர்க்கத்தின் கதவுகளும் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்களுக்கெல்லாம் விலங்கிடப்படுகின்றன. சொர்க்கத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் ஒன்று ரய்யான். அந்த வாசல் வழியாக நோன்பாளிகளைத் தவிர  வேறு யாரும் நுழைய மாட்டார்கள்."

Free Orkut and MySpace ramadan mubarak Graphics Glitters
யார் ரமலான் மாதத்தில் ஈமானுடனும், நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, இன்னும் “லைலத்துல் கத்ர்’ இரவிலும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் செய்த சிறிய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
“யார் ரமழான் மாதத்தை அடைந்துகொண்டு, பாவங்களுக்கு மன்னிப்புப் பெற்றுக் கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்’
என வானவர் தலைவர் ஜீப்ரயீல் (அலை) அவர்களே துஆ, செய்ய  நபி (ஸல்) அவர்களும் ‘ஆமீன்’ என்று கூறியிருக்கிறார்கள் என்றால் இந்த மாதம் எவ்வளவ்வு மதிப்புகுரிய மாதம் என்று நாம் உணர வேண்டும் .
இந்த மாததில் நமக்கு பாவமன்னிப்புகள் வழங்கப்படுகின்ற ஒரு அற்புத மாதமாக இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். அதிகம் இறைவனை நினைத்து நாம் செய்யத அறிந்தும் அறியாமல் செய்த பாவகளுக்கு பிழைப்பொறுக்க து ஆ செய்யவும்.
”நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஏனென்றால், எனக்காகவும், என் திருப்திக்காகவும் பசித்திருந்தான். தன் இச்சைகளை அடக்கியிருந்தான். மேலும், நோன்பு திறக்கும் போதும், தன் இறைவனை சந்திக்கும் போதும் நோன்பாளிக்கு இருவகை சந்தோஷம் உள்ளது,” என்கிறான் அல்லாஹ்.
Ramadan Mubarak
 லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது (புகாரி)
எனவே இந்த மாதத்தின் சிறப்பை உணர்ந்து, இந்த மாதம் முழுவதும் நோன்பிருந்து, அல்லாஹ்வின் அருள் பெறுவோம். அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாகவும் ஆமீன்.

நிலவு - ஓர் உரைநடைக் கவிதை


நிலவு - ஓர் உரைநடைக் கவிதை



ஆம்! நிலவு...

நமை சூழ்ந்த எழில் எத்துனையாயினும்,
நிலவு ரம்யமான படைப்புதான்.

இரவை அலங்கரிப்பது,...
சாமகால காட்சியில் கதாநாயகனாய் உலாவருவது.

உலகின் நிகழ்வுகளை 
ஓசையின்றி நோட்டமிடும் ஒற்றை கண்'ணது,


கண்கள் உறங்கும் நேரம் விழிக்கிறது,
கண்விழிக்கும் போது மறைகிறது...

எதைச் சொல்ல இரவில் காய்ந்து,
பின் சொல்லாமலேயே பகலில் ஓய்கிறது???

குளுமையை மட்டுமே தன்மையாகக் கொண்டது.
பார்க்கும் விழிகளுக்கும்,விழிவழி மனதிற்கும்
குளுமையை தாராளமாய் தருவது.

ஈரேழு நாட்களிலே தேய்தலும்,..வளர்தலுமாய்
வாழ்க்கை தத்துவத்தை வடிவாய் உரைப்பது.

தத்துவமா??
ஆம்.வாழ்வெனில் அதில் மகிழ்வு,உயர்வென்ற வளர்ச்சிகளும்,
தோல்வி,துன்பமென்ற தேய்வுகளும் இருக்குமென....

மழலைகள் சோறுங்க
பல கதைகள் உனைத்தொட்டு,

மழலைமாறி நான் வளர,
இருளில் துணையாக வீடுவரை என்னுடன்,
முற்றத்திலும் நீ...கொல்லையிலும் நீ
திண்ணையிலும் நீ,ஓட்டின் இடுக்கிலும் நீயென,
என்னுடன் ஓடி,ஒழிந்து விளையாடி...

பதின்மத்தை நான் எட்டும் போது,
பலகனவுகள் கண்முன்னே
கனவுகளை கதைப்பதும் உன்முன்னே..

விழுதாய் நான் விழ வேராய்த் தாங்கிய,
என முன்னோர் கண்டதும் அதே நிலவு.
அன்னார் முகங்களை தன் ஒளியால் பதிந்ததும் அதே நிலவு,
இன்று என் முகத்தையும் பதிவாக்கிக் கொள்கிறது.
நாளை, நான் முன்னோராகிப்போக..
என், வழியின் முகமும் பதிவாகும்.

நிலவு - பழமையை உணர ஒப்பற்ற ஊடகமாய் நம் முன்.
காலம் மாற காட்சிகளும் மாறிடும்....
ஆனால்,அனைவரும் கண்ட காட்சி...மாறாக் காட்சியது நிலவு மட்டுமே..
காலச்சுவடாக ஏட்டில் கண்ட மனிதன் யாவரும் நிலவுக்கு பரிச்சியம்.
அவன் கண்ட,அவன் களித்த அதே நிலவு இன்று நம்முன்...

பல்வேறு காலங்கள்,பல்வேறு ரசனைகள்
பன்னாட்டு மக்கள்,பலகோடி சிந்தனைகள்
பலவித பருவம்,பன்நூறு எண்ணங்கள்,
என அத்துனைக்கும் பன்பரிமாணமாய்
நீ காட்டும் ஒற்றை முகம்...

தனக்குள் எத்துனை செய்திகளை கட்டிவைத்தும்!!!...
பார்வைக்கோ எளிய கோ(ல)ளமாய்....(Pause)

விழி விரியும் பிரம்மிப்பு அடங்கவே இல்லை...
நிலவைப் பார்த்து அல்ல....
நிலவைப் படைத்தவனைப் பார்த்து...

ஆம்...
பிரம்மாண்டங்களை ஆக்கிவிட்ட
ஏகனின் பிரம்மாண்டமான எளிய படைப்பு...

மனிதன் எத்தனை முயன்றாலும் இயலாததைப் படைத்து,
அதில் சிந்திக்க ஏகத்துக்கும் பொதித்து
அவனிருப்பை சாட்சி சொல்லும் அத்தாட்சியாக,,,

நிதமும் சுற்றுகிறது நிலவு....



நிலா ரசிகன்
ரஜின்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமலான் மாதத்தில் நோன்பு நோற்று நன்றி செலுத்தும் நன்னாளான ஷவ்வால் முதல் நாள் ஈகைத்திருநாள் ரமலான் பெருநாள் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.


புத்தாடை அணிந்து ஏழை எளியவர்களுக்கு ஜகாத் என்னும் தானதர்மங்களை வழங்கும் இந்நன்னாளில் நாம் அனைவரும் ஒற்றுமையாக சாதிமத பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையாக இருக்க எல்லோருக்கும் நல்லமனதை நம் இறைவன் தந்தருள்வானாக.. ஆமீன்..

அனைவருக்கும் என் இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துகள்..


ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?





இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.

இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!


இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!







இன்பப் பெருநாள் ஈகைத் திருநாள்!
=============================


*உள்ளம் இனித்திடவே உவகைப் பெருநாள் வந்ததுவே!
இல்லம் மகிழ்ந்திடவே ஈகைத் திருநாள் வந்ததுவே!
ரமலான் முழுதும் தினமும் நோன்பினை நோற்றனரே!
எமதிறை அல்லாஹ் பேரருள் ரஹ்மத் பெற்றனரே!

*ஐம்பெரும் கடமை ரமலான் அதில் ஒன்று.
ஐயம் இல்லை நன்மைகள் பற்பலவே உண்டு.
உறுப்புகள் உழைக்குது தினமும் இரவுபகல் நேரம்.
ஓய்வு கொடுப்போம் பகலில் சிலமணி நேரம்.

*புசிப்பவர் அறியார் ஏழைபடும் பசியின் துயரம்.
பசியின் கொடுமை நோன்பாளிகள் உணரவே முடியும்
நோன்பு என்பது பலமுள்ளோர் மீதுதான் கடமை
மாண்பு கண்டு ஏற்பதும் நம்மீது உடமை!

*இல்லாதார்க்கு உள்ளோர் கொடுத்தால் அதுதான் ஈகை
வல்லோன் தருவான் மறுமைதனிலே மாபெரும் வாகை
மகிழ்ச்சியுடன் உவந்திடுவோம்.....
......பெருநாள் இன்றைய தினம்
நெகிழ்ச்சியுடன் வாழ்த்துகிறது எனதினிய அன்பு மனம்!

அனைவருக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

அன்பன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.

ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !


ஃபித்ராவின் சிறப்பும் +பெருநாள் வாழ்த்தும் !

 அஸ்ஸலாமு அலைக்கும்  வரஹ்......


புனித  ரமலான்  முழுவதும்  பகல்  பொழுதில்  நோன்பிருந்து, இறுதி  நோன்பை  முடித்து, அதற்கடுத்த  தினம்  ஈகைப்  பெருநாளை  கொண்டாடி  மகிழ்கிறோம். பத்தாடை  அணிந்து, நறுமணம்  பூசி,சுவையான  உணவுகளை  உண்டு  கழிக்கிறோம். அல்லாஹ்வுக்கு  நன்றி  கூறுகிறோம். இவ்வாறு  மகிழ்வுடன்  இருக்கும் போது நம்  கண்ணெதிரில், நம்  பக்கத்து  வீட்டில்,அடுத்த  தெருவில் நம்மைச்  சுற்றி  எத்தனையோ  ஏழைகள்-சகோதர,சகோதரிகள் நம்மைப் போன்றே  நோன்பு  நோற்று  விட்டு பெருநாளை  மகிழ்ச்சியுடன்  கொண்டாட முடியாமல்  வாடிக்  கொண்டிருப்பார்கள். இந்நிலை ஏற்படாமல் வசதி  படைத்தவர்களைப்  போன்றே எல்லாமக்களும்  மனங்குளிர  உணவருந்த வேண்டும்  என்பதற்காக  இறைவனால்  வழங்கப்பட்ட  திட்டம்  தான்  ஃபித்ரா  எனும்  பெருநாள்  தர்மம்  ஆகும்.


முஸ்லிமான  ஆண்,பெண்,சிறியவர்,பெரியவர்,பணியாட்கள் அனைவருக்காகவும் பெருநாள் தர்மத்தை  நபி {ஸல்} கடமையாக்கினார்கள்  என்று  இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}
உணவு பொருட்களாகவோ,பணமாகவோ  ஃபித்ராவை  வழங்கலாம்.
பெருநாளைக்கு  சில  தினங்கள்  முன்பாகவே  இதனை  வழங்குதல்  சிறப்பாகும் நபித்  தோழர்கள்  ஃபித்ராவை பெருநாளைக்கு சில நாட்கள்  முன்பாகவே  கொடுத்து  வந்தனர் என்று இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}


பெருநாள் தொழுகைக்கு  முன்னரே ஃபித்ராவை கொடுத்துவிடுமாறு  நபி{ஸல் அவர்கள்  கூறியதை,இன்றைய  மக்கள்  பெருனாளன்று  காலையில்  ஏழைகளைத்  தேடுமளவு  ஆக்கி  கொண்டார்கள்.


ஃபித்ரா தரமானதாகவும்  பிறர்  உண்ணும் வகையிலும் இருக்க வேண்டும்.
ஒருவர்  மட்டகரமான  பேரிச்சம்பழத்தை  கொண்டு வந்தார். அதை நபியவர்கள்  பெற்று கொள்ளாமல்,  அதை கணக்கில் எடுத்து  கொள்ள வேண்டாம்  என்று  தடுத்து  விட்டார்கள். இப்னு உமர் {ரலி} அறிவிக்கிறார்கள்.{நூல் புகாரி}

  
நபித்தோழர்கள் காலத்தில்  இருகைகளால்  உணவு பொருகளைப் வாரி வழங்கி  அதனை  ஒரு  ஸாவு என கண்கிட்டார்கள்.

இருகைகளையும் சேர்த்து ஒரு பொருளிலிருந்து நான்குமுறை அள்ளி அளந்து போடுவதே ஒரு 'ஸாவு' என்பதன் அளவாகும்.
இரண்டரை கிலோ கொண்ட ஒரு அளவாகும்.


நபி(ஸல்) அவர்களின் காலத்தில் கோதுமை - பேரீத்தப்பழங்கள் பெருநாள் தர்மமாக கொடுக்கப்பட்டதால் நாமும் அதையே கொடுக்க வேண்டும் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. இன்றைக்கு நம்முடைய உணவு முறை எதுவாக இருக்கிறதோ அதைத்தான் உணவாகவோ அல்லது பணமாகவோ கொடுக்க வேண்டும்.



ஃபித்ரா  நோக்கத்தையும், அதன்  சுன்னத்தான  முறையையும்  நாம் உணர்ந்து, ஏழை  முஸ்லீம்களையும் சந்தோஷமாக  பெருநாள்  கொண்டாட  வகை  செய்வோம். அல்ஹம்துலில்லாஹ் ....

                                                                

                                                                
அஸ்ஸலாமு  அலைக்கும்  வரஹ் ...                                                              

                அனைவருக்கும்  ஈத்  பெருநாள்  நல் வாழ்த்துக்கள்.  


                                                              உங்கள் சகோதரி 
                                                               ஆயிஷா  அபுல் .


புனித ரமலான் மாதமும் நம்மை கடந்து செல்கிறது. பிரிய மனமின்றி ஏக்கத்துடன் விடை கொடுப்போம்.எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!