♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 25 ஜூலை, 2012

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?





இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக