♥ தங்கள் வருகைக்கு மிக்க நன்றி!!!…♥;

புதன், 25 ஜூலை, 2012

தாயகம் முதல் அமீரகம் வரை






கூடிய உறவின்
வாடிய முகம் கண்டு,
விழிதனில் மகிழ்வின்றி
விடைதர மொழியின்றி
நடந்திட வழியின்றி
நான் வரும் நேரம்


காத்திருக்கும் காதலிபோல்
ஓடுதளத்தில் நின்றிருந்தாய்...
வரமறுக்கும் காலிரண்டை
கம்பளமிட்டு வரவேற்றாய்...


பிரிவின் வேதனை அனல் கூட்ட,
குளிரூட்டிதனை கொண்டு
கனல் தணிக்க முற்பட்டாய்

வினாடி முள் விரைவாய் ஓடி
புறப்பட உனை வலியுருத்த
கனநேரம் பொருக்காது
எந்திரத்தை சுழலவிட்டு,
விசை முறுக்கி முன்சென்றாய்

எனை நானே கட்டிக்கொண்டு
இருக்கை'யிலே கைதியாக,
வழிநின்று வகுப்பெடுத்தாய்
வாய் மூடி குறிப்பெடுத்தேன்...

திறன் கூட்டி தளம் ஓடி
தரை நீங்கும் அந்நேரம்
கழுகது கைப்பற்ற.,
காப்பாற்ற கதறியழும்
இளங்கோழிக் குஞ்சினது
உளம் ஒத்து உறைந்து போனேன்.

விரும்பியதை கேள் என்று
பட்டியலை முன்வைத்தாய்..
அதை விரிக்க மனமின்றி
அப்படியே நான் கொடுக்க..
கொண்டதை கை தந்து
விருந்தோம்பல் கடன்கழித்தாய்

துயர்மறந்து துயில்கொள்ள ஒளிகுறைத்து நீ உதவ,
முகம்சிவக்க கதறிவிட்டு,கண்ணயரும் பாலகனாய்
சிறுதுயிலில் மெய் மறக்க...

பயணிகளின் கவனத்திற்கு...
பயணதூரம் குறைகிறது
இறங்கு தளம் தெரிகிறது
இடுப்புப் பட்டை தனை இருக்கி,
இயல்பாய் அமரக என
ஒலி பெருக்கி எனை பணித்தாய்...

பசுமைகண்ட உள்ளமது
பாலைகாண மறுக்கயிலே,
இல்லமதின் வறட்சி நீங்க
எண்ணமதை மாற்றிக்கொண்டேன்

இறகு மடித்து தரை இறங்கி,
அனல் பறக்கும் பாலை காட்டி
இறங்கி நட என்றுறைத்தாய்

அரபு நாட்டை தரம் உயர்த்த
தாய் நாட்டைப் பிரிந்த என்னை,
வருகவென வரவேற்றான்
ஆங்கோர்
வெண்ணிற ஆடை மூர்த்தி...


தொலைவில்
ரஜின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக